Alagiyaithal Chat


தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

எனக்கு பூக்கள் பிடிக்கும் என்பதற்க்காய் 
இந்த பண்டிகை தினத்தில் 
பூ வேலைப்பாடுகள் அமைந்த புதுப் புடவையை 
எனக்காய் கட்டிக்கொண்டு 
என்னிடம் காட்டுவதற்காய் 
உன் தோழிகளோடு என் வீட்டுப் பக்கம் 
ஆசையோடு சுற்றிக்கொண்டிருக்கிறாய்… 

உனக்கு வேட்டி சட்டை பிடிக்குமென 
அணிந்து நான் உன் வீட்டுப் பக்கம் 
திரிந்துகொண்டிருப்பது தெரியாமல்… 



ஒரு கட்டத்தில் இருவரும் 
முகம் காண முடியாத சோகத்தோடு 
வீடு திரும்பிக் கொண்டிருக்கையில்… 

எதேட்சையாய் ஒரு சாலை முனையில் நேர்ந்த 
பரவச சந்திப்பில் 
நம் கண்களுக்குள் சுழன்றன 
சங்கு சக்கரங்கள்… 

அப்பொழுது சட்டென ஒரு சரவெடி வெடிக்க 
சாலை என்றும் பாராமல் 
வந்துவிட்டாய் எனக்கு நெருக்கமாய்… 

பின் உணர்வறிந்து வெட்கி ஓடிவிட்டாய் 
உன் வீட்டுப் பாதையில்… 

அங்கு வெடித்த வெடியால் 
நீ என் பக்கம் வந்ததில் 
எனக்குள் வெடித்த வெடி அடங்க 
அரைமணி நேரம் ஆனது… 



மெல்ல மாலை நேரத்தில் 
இப்பொழுது நீ என்ன செய்துகொண்டிருப்பாய் என 
பார்த்துவிட்டுப் போகலாமென 
உன் வீட்டுச் சாலைக்கு நான் வந்த பொழுது… 

கம்பி மத்தாப்புக்களை கைகளில் ஏந்தியபடி 
சின்னப் பிள்ளைப் போல 
அங்கும் இங்கும் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தாய்… 

என்னைக் கண்டுவிட்ட பதட்டத்தில் 
ஒளிந்துகொண்டாய் வீட்டுக்குள்… 

பின் மெதுவாய் ஒன்றும் அறியாதவள் போல 
வெளியில் வந்து 
மற்றவர்கள் வெடிப்பதை 
கைகளைக் கட்டிக்கொண்டு 
ரசித்துக் கொண்டிருக்கிறாய் 
அப்படியே தூரத்தில் இருக்கும் என்னையும்… 



அக்கணத்தில் திடீரென 
வெடித்துவிட்ட புஷ்வானத்தைப் பார்த்து 
கண்கள் நிறைய பயத்துடன் 
உன் அன்னையை கட்டிக் கொள்கிறாய் இறுக்கமாய்… 

நான் சிரித்துவிட்டதை கண்டு 
மீண்டும் உன்னை 
தைரியமானவளாய் காட்டிக்கொள்கிறாய்… 



எனக்கென ஒருத்தி இல்லாத 
போன வருட தீபாவளியையும் 
எனக்கென நீ கிடைத்திருக்கும் 
இந்த தீபாவளியையும் 
நினைவில் உருட்டியபடி… 

உன் குறும்புத்தனங்கள் அத்தனையும் 
அவ்வளவு அழகென சொல்லியபடி… 

பட்டாசும் மத்தாப்பும் வானவேடிக்கைகளுமாய் 
மின்னிக் கொண்டிருக்கிறது 
இந்த ஊரைப் போல 
என் மனதும் தீபாவளியில்… 



இயந்திரங்களாய் சுற்றிக் கொண்டிருக்கும் நமக்கு 
இன்ப இளைப்பாறல் தரத்தான் வருகின்றன 
அடிக்கடி பண்டிகைகள்… 

அதனால் அனைத்தையும் மறந்து 
அனுபவியுங்கள் கொண்டாடுங்கள் 
இந்த கணத்தை இந்த தினத்தை… 

பிரியமானவர்களுக்கு பிரியனின் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்…
*****என் கவிதை பக்கம், பல கால கட்டங்களில் வடிவமைத்த என் எண்ணங்களை கவிதைகளாய் வடிவமைத்துள்ளேன்... முடிந்தால் திரும்பி பாருங்கள்...*****

0 comments:

Post a Comment